வருக ! ரமழானே ! வருக ! (பீ. எம். கமால், கடையநல்லூர்)

வருக ! ரமழானே ! வருக !

(பீ. எம். கமால், கடையநல்லூர்)

 

பசியைப் பகிர்ந்தளித்துப்

பட்டினியை உணரவைக்கும்

பத்திய மாதமே !

பத்திரமாக வா ! வா !

 

உன்னை வரவேற்க

இதயத்துக் கரங்களை

ஏந்துகிறோம் வா !

 

கலவைக் கொள்கைகளை

சலவை செய்து

ஈமான் கொடியில்

காயப் போட

ரமழானே வா !

 

எங்கள் ஈமான்

துருப்பிடித்துக் கிடக்கிறது !

சுட்டெரித்து அதனைச்

சுடரச் செய்ய வா வா !

 

பசித்தீயில் ஆன்மாவைப்

புடம்போடப் போகின்றோம் !

பரமனையே நினைந்துருகிப்

பசியாறப் போகின்றோம் !

எங்கள்

பந்திக்கு இலை விரிக்க

பாய்ந்தோடி வா !

 

 

கிழிந்தும் இழிந்தும்

நலிந்தும் மெலிந்தும்

கிடக்கின்ற எங்களை

பசிஊட்டச் சத்துகொண்டு

பக்குவப் படுத்த வா !

 

உமியை அரிசிஎன்றும்

நீர்க்

குமிழை நிஜமென்றும்

நம்பி ஏமாந்து

நட்டாற்றில் கிடக்கின்றோம் !

ஈமானை இதயத்தில்

ஏற்றிவைக்க நீ வா !

 

கானல் நீரில்

வலை விரித்துக்

காத்துக் கிடக்கின்றோம் !

அல்லாஹ்வின்

அருட்கடலில் வலைவிரிக்க

வலையோடு வா !

 

முள்வேலிக்குள் நாங்கள்

முகிழ்த்திருக்கும் ரோஜாக்கள் !

வேலிகள் எங்களை

வேதனைப் படுத்தாதிருக்க

அல்லாஹ்வின் கயிற்றோடு

(ஹப்லுல்லாஹ் )

அகிலத்திற்கு வா  Buy Lasix !

 

நாங்கள் கழித்தல் குறிகளாய்க்

காலொடிந்து கிடக்கின்றோம் !

எங்களை

ஆச்சரியக் குறிகளாய்

ஆக்குதற்கு நீ வா !

 

திக்கெலாம் நாங்கள்

திசைமாறிக் கிடக்கின்றோம் !

திருமறை நபிவழித்

திசை காட்டும் கருவிகளை

தொலைத்துவிட்டு நாங்கள்

தொலைந்து போய்விட்டோம் !

எங்களைக் கண்டுபிடிக்க

ஈமான் கண்ணாடியை

இறக்குமதி செய்திடுவாய் !

 

இறக்குமுன் இறக்கும்

இரசவாதம் அறிந்திடவும்

பசியைப் பகிர்ந்தளிக்கும்

பக்குவம் புரிந்திடவும்

பாடப் புத்தகத்தைப்

பாருக்குக் கொண்டுவா !

 

ஆன்மக் கண் இமைவிரித்து

ஆயிரமாய்க் கரமேந்தி

உன்னை வரவேற்க

ரமழானே ! நாங்கள்

உறங்காமல் காத்திருப்போம்

ஓடிவந்து அருள் பொழிவாய் !

Add Comment