தண்ணீரின் கண்ணீர் ! (பி. எம். கமால், கடையநல்லூர் )

தண்ணீரின் கண்ணீர் !
(பி. எம். கமால், கடையநல்லூர் )
தண்ணீர் நான்
அழுகின்றேன் !
என்
கண்ணீரை
யாரறிவார் ?
என்
மழைத்துளி நாணயத்தை
ஏரி குள உண்டியலில்
சேமிக்கத் தெரியாத
சிறுமனம் படைத்தோரே !
ஏரிகளும் குளங்களும்
என்தாய் மடிகள் !
பூமியைத் தாயென்று
புலம்புகின்றவர்களே !
அந்தத் தாயின்
மார்பகத்தை
உறிஞ்சுகின்ற
அட்டைகளா நீங்கள் ?
என்
கரையோர மேனிகளை
நீங்கள்
கட்டிடக் கொப்புளங்களால்
நோயாக்கி விட்டீர்கள் !
நான்
அருவிகளாய்க் கொட்டி
ஆறுகளாய் நடந்து
கடல்களில் கலந்து
கதிமோட்சம் அடைகின்றேன் !
என்
புனிதப் பயணத்தை
மனிதக் கழிவுகளே !
நீங்கள்
மாசுபடுத்தி விட்டீர்கள் !
ஆமாம் !
அரசியல் சாக்கடையால்
என்னை நீங்கள்
அழுக்காக்கி விட்டீர்கள்!
தண்ணீர் எனக்கே
தாகத்தைத் தந்தவர்களே !
முந்நீரும் உங்களை
முற்றுகையிட் டிருந்தாலும்
தாகத்தால் உங்களை
தவிக்க விட்டுவிட்டேன் !
நான்
நெருப்பை Viagra online அணைக்கும்
நீர்தான் என்றாலும்
என்
சீற்றத்தில் எரிகின்ற
நெருப்பின் சூட்டை
நீங்கள்
உணரச் செய்துவிட்டேன் !
என்
கரைகளைக் களவாண்ட
கறைவேட்டிக் காரர்களே !
உங்கள்கறைகளை எப்போது
கழுவப் போகிறீர்கள் ?
நான்
நடந்தும் கிடந்தும்
நாகரிகம் வளர்த்தேன் !
என்
முந்தானையை உருவி
முகம் துடைத்துக் கொண்டீர்கள் !
என்
காற்சிலம்பை நீங்கள்
களவாடிய காரணத்தால்
தண்ணீர் நான் தணலாக
உருமாறி எரிக்கின்றேன் !
பேசாமல் என்வழியில்
எனைப்போக விடாமல்
என்
ஆழத்தில் இறங்கி
அள்ளிய மணல் திரட்டால்
உள்ளம் கொதித்து நான்
பிரளயமாய் ஆகிவிட்டேன் !
இதோ என்
நெற்றிக்கண் திறந்து
நெருப்பாகி நிற்கின்றேன் !
குற்றவாளிகளே !
உங்களைக்
குலை நடுங்கச் செய்கின்றேன் !
இனியும் நீங்கள்
பாடம்படிக்காமல்
பழைய கதை தொடர்ந்தால்
மூச்சிரைக்க வந்துங்களை
மூழ்கடித்து விடுவேன் நான் !

Add Comment