நல்லூர்வாசிகளின் வரலாற்றுக்குப் பின்னால்…

பாலைவனப் புளுதியில் புதைந்து போன நல்லூர்வாசிகளின் வரலாற்றுக்குப் பின்னால் தோற்றுப்போன நெசவாளர்களின் வறுமையும்,பசியும் படிந்திருக்கிறது….

ஏன் இந்த நிலை?
தானாக விழுந்தோமா?
தள்ளப்பட்டோமா?
விவாதிக்க தேவையேயில்லை…
நிச்சயமாக தள்ளப்படுள்ளோம் என்பதே கசப்பான கடையநல்லூர் வரலாறு…

நெசவுத் தொழில் தனது கடைசி அத்தியாத்தை எழுதிக்கொண்டிருந்த எண்பதுகளின் இறுதியில் பிறந்தவன் நான்….

காலை 4 மணிக்கு தொடங்கும் பாவு ஆற்றும் படலம் , முன்பகலில் தறி நெய்வதாக பரிணமத்தி மாலை 6 மணி வரை தொடரும்…

14 மணி நேர பணி செய்தும் இரண்டு வேளை கூட சுடுசோறு உண்ணவியலாத அடிமட்ட வருமானம் தான் வளைகுடா நோக்கி விசா கேட்டு விசாரிக்க வைத்தது….

நெசவுத்தொழில் நல்ல தொழில் தான்…
ஆனால் கடையநல்லூரில் அது முறைப்படுத்தப்படாத அமைப்பு சாரா தொழிலாக அமைந்திருந்தது துர்ரதிர்ஷ்ம்…
அது தான் பிரச்சனை…

ஒரு பின்னலாடை தொழிற்சாலையில் குறைந்த கூலி கொடுத்தால் கொடி பிடித்து தொழிலாளர்கள் போராட்டம் செய்து ஊதியத்தை உயர்த்திக் கேட்க முடியும்…

ஆனால் கடையநல்லூர் நெசவுத் தொழில் சற்று விசித்திரமாக கட்டமைந்திருக்கிறது…
அல்லது திட்டமிட்டே கடனமைக்கப்பட்டிருக்க கூடும்…

இங்கே தொழிற்சாலை கிடையாது…அதற்கு பதிலாக ஒவ்வொரு வீட்டிலும் அவரவர் கைத்தறிகளை நிருவி , ஒப்பந்த அடிப்படையில் சொந்த தொழிலுக்கே கூலிகளாக மாறியிருக்கிறார்கள்…
மிகப்பெரிய வரலாற்றுப் பிழை இது தான் என்பேன்…

கைத்தறியிலிருந்து ஒவ்வொருவரும் மெஷின் தறியை நோக்கி நகர்ந்திருந்தால் கடையநல்லூர் இன்று இன்னொரு திருப்பூராக ஜொலித்திருக்குமோ என்னவோ…

ஆனால் வயிற்று பாட்டுக்கே திண்டாடிய அந்த மக்களிடம் மெஷின் தறியை நிருவ முதலீடு இல்லாமல் போயிற்றே…

ஏறத்தாழ இரண்டு தலைமுறை கடந்து மூன்றாம் தலைமுறை இன்று ‘நெசவுத் தொழில்னா என்ன சார்?’ என்று கேட்கும் நிலைக்கு வந்து விட்டோம்…
இனி யூடர்ன் எடுக்க சாத்தியமே இல்லை…

சரி, வேறு என்ன தான் தீர்வு?

மிஞ்சிப்போனால் ஏதேனும் கடை வைக்கலாம்…
10000 ரூபாய் சம்பாதிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்….

திக்கற்று நின்ற மூன்றாம் தலைமுறையும் கடவுச் சீட்டை கையில் எடுக்க வேண்டிய நிர்பந்தம்…
இல்லாது போனால் தோற்றப்போனவன் பட்டியலில் சேர்த்து விடுவார்கள்….

வெளிநாட்டில் வேலை செய்யும் பலரும் மனதளவில் வேதனைகளோடே வாழ்கிறார்கள்….

திருமணம் முடிந்த ஒரே மாதத்தில்,இரண்டு மாதத்தில் ,மூன்று மாதங்களில் மனைவியை,சொந்தங்களை, நட்பு,பழகிய ஜனங்களை பிரிந்து பாலைவனத்தை நோக்கி பறக்கும் மனதின் வலியை எழுத்தில் கொணர்வது இயலாத ஒன்று…

குழந்தை பிறந்தபோது வாட்ஸ்அப்பில் புகைப்படம் பார்க்கையில் ,தாய் ,தந்தை மரணித்த செய்தி கேட்டு அழுகின்ற போது ,
தங்கைக்கு திருமணம் நடந்ததை வீடியோவாக மட்டுமே காணக் கிடைக்கும்போது…மனைவி,குழந்தை ,உறவுகளின் உடல்நலமின்மைக்காக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி கேட்ட போது…
என்னடா இது வாழ்க்கை என்று சலிக்காதவர்கள் இங்கே இல்லை…

குழந்தை முகமோ,மனைவியின் அரவணைப்போ,தாயின் அன்போ விடுமுறை தினவங்களில் மட்டுமே சொந்தம் …மற்ற மாதங்களில் தொலைதூரத்தில் அலைபேசியில் அளவளாவிக் கொள்வதைத் தாண்டி வேறென்ன செய்ய முடியும்?

வறுமையை ,பசியை ஜெயித்த ஃபீனிக்ஸ் பறவைகள் நாங்கள்…
குடும்பத்திற்காக விறகாகி,மெழுகாக எரிகிறோம்…
எங்கள் சாம்பலிலிருந்து அடுத்த தலைமுறையும் அதே வளைகுடா சூரியனை நோக்கி பறக்கவிருக்கிறது…

கடைசிவரை பறந்து ,கடைசியாக இறந்தும் விடுகின்றோம்..
தொலைந்து போன வாழ்க்கையை தேடித் தேடி தொலைதூரமாய் தொலைந்து தொலைந்தே போகிறோம் எங்கள் பிள்ளைகளின்,குடும்பத்தாரன் எதிர்காலத்திற்காக….

– ஜாபர் ஹஃபீஸ்
#நல்லூரதிகாரம்

Add Comment